கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி இன்று தொடக்கம் - பிரக்ஞானந்தா, குகேஷ் பங்கேற்பு


கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி இன்று தொடக்கம் - பிரக்ஞானந்தா, குகேஷ் பங்கேற்பு
x

இந்தியாவின் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்பட 116 பேர் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.

சமர்கண்ட்,

‘பிடே’ கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் இன்று தொடங்குகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த தொடர் ஓபன் மற்றும் பெண்கள் என இரு பிரிவாக நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபன் பிரிவில் இந்தியாவின் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, அனிஷ் கிரி (நெதர்லாந்து), லெவொன் அரோனியன் (அமெரிக்கா), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி) உள்பட 116 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக ‘ைலவ் ரேட்டிங்’ தரவரிசையில் 4-வது இடத்துக்கு ஏற்றம் கண்டுள்ள தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, அதன் அடிப்படையில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி இடத்தை ஏறக்குறைய உறுதி செய்து விட்டார் என்றே சொல்லலாம். ஆனாலும் இந்த தொடரில் கவனம் ஈர்க்கும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். உலக சாம்பியனான குகேஷ், பெரிய போட்டிகளில் தன்னை நிரூபித்து காட்ட வேண்டிய உத்வேகத்துடன் களம் காணுகிறார்.

பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹரிகா, வந்திகா அகர்வால், சீனாவின் டான் ஜோங்ஜி, உக்ரைனின் அன்னா முசிசுக் உள்பட 56 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அண்மையில் உலக கோப்பை செஸ் போட்டியில் வாகை சூடிய இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் ஏற்கனவே கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்று விட்டதால், ‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் ஓபன் பிரிவில் ஆட உள்ளார். அதாவது வீரர்களுடன் அவர் மோத இருக்கிறார்.

ஓபன் பிரிவு போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.5.5 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.79.25 லட்சமும், 2-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.66 லட்சமும் வழங்கப்படும். முதல் நாளான இன்று தொடக்க விழாவும், வீரர், வீராங்கனைகளின் மோதலுக்கான போட்டி அட்டவணையும் முடிவு செய்யப்படுகிறது. முதல் சுற்று ஆட்டம் நாளை நடக்கிறது.

1 More update

Next Story