ஐரோப்பிய கார் பந்தயம்: அஜித்தின் அணிக்கு 2-வது இடம்

பெல்ஜியமில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி 2-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
பிரஸ்சல்ஸ்,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்தது. இதைத் தொடர்ந்து பெல்ஜியம் நாட்டில் Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் கலந்துக் கொண்டார்.
இந்த பந்தயத்தில் அஜித்தின் அணி 2-வது இடம் பிடித்து சாதித்து இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய மோட்டார் விளையாட்டு துறைக்கு இது பெருமையான தருணம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த வெற்றியை அஜித்குமாரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.