குரோஷியா சர்வதேச செஸ் போட்டி: நார்வே வீரர் கார்ல்சென் 'சாம்பியன்'

image courtesy: @FIDE_chess
சென்னையை சேர்ந்த 19 வயது குகேஷ் (19.5புள்ளி) 3-வது இடமும் பெற்றார்.
ஜாக்ரெப்,
இந்த ஆண்டுக்கான கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமான சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பில் நடந்தது. இதில் 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), உலக சாம்பியன் குகேஷ் (இந்தியா) உள்பட 10 வீரர்கள் பங்கேற்றனர்.
முதலில் நடந்த ரேபிட் பிரிவில் குகேஷ் (14 புள்ளி) 6-வது சுற்றில் கார்ல்செனுக்கு அதிர்ச்சி அளித்ததுடன் முதலிடம் பிடித்தார். போலந்தின் ஜான் கிர்சிஸ்டோப் டுடா (11 புள்ளி) 2-வது இடமும், நார்வேயின் கார்ல்சென் (10புள்ளி) 3-வது இடமும் பெற்றனர்.
இதைத்தொடர்ந்து பிளிட்ஸ் பிரிவு அதிவேக போட்டி நடந்தது. ரேபிட் பிரிவில் தடுமாறிய கார்ல்சென் 18 சுற்றுகள் கொண்ட பிளிட்சில் அசத்தினார். இதில் முதல் நாளில் குகேசை வீழ்த்திய கார்ல்சென், 2-வது நாளில் அவருக்கு எதிரான ஆட்டத்தில் 14-வது நகர்த்தலில் 'டிரா' கண்டார். ஒரு சுற்று எஞ்சி இருந்த போதே பட்டத்தை உறுதி செய்து விட்ட கார்ல்சென் கடைசி சுற்றில் குரோஷிய வீரர் இவான் சாரிக்கை வீழ்த்தினார்.
18 சுற்று முடிவில் பிளிட்ஸ் பிரிவில் கார்ல்சென் 12.5 புள்ளியுடன் முதலிடமும், அமெரிக்க வீரர் வெஸ்லி சோ 12 புள்ளியுடன் 2-வது இடமும், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் 12 புள்ளியுடன் 3-வது இடமும் பிடித்தனர்.
ஒட்டுமொத்தத்தில் கார்ல்சென் (22.5 புள்ளி) சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். கிராண்ட் செஸ் தொடரில் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டியில் கார்ல்சென் தொடர்ச்சியாக கைப்பற்றிய 6-வது பட்டம் இதுவாகும். அமெரிக்காவின் வெஸ்லி சோ (20 புள்ளி) 2-வது இடமும், சென்னையை சேர்ந்த 19 வயது குகேஷ் (19.5புள்ளி) 3-வது இடமும் பெற்றனர்.
சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கிய கார்ல்செனுக்கு ரூ.34 லட்சமும், வெஸ்லி சோவுக்கு ரூ.25¾ லட்சமும், குகேசுக்கு ரூ.21½ லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.