சென்னையில் ஆசிய கோப்பை சைக்கிளிங் போட்டி

15 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.
சென்னை,
ஆசிய டிராக் கோப்பைக்கான சர்வதேச சைக்கிளிங் போட்டி ஜனவரி 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக நடக்கும் இந்த போட்டியில் இந்தியா, ஹாங்காங், மலேசியா, ஈரான், சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்பட 15 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறங்குகிறார்கள்.
இந்த போட்டிக்கான இலச்சினையும், தீரன் எனும் பிரத்யேக சின்னமும் சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி, இந்திய சைக்கிளிங் சம்மேளன பொதுச் செயலாளர் மணீந்தர்பால் சிங், தமிழக சங்க தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






