2025 தடகள போட்டிகள்; வெற்றியுடன் தொடங்கிய நீரஜ் சோப்ரா

டவ் ஸ்மிட் மற்றும் டன்கன் ராபர்ட்சன் ஆகிய இருவரையும் பின்னுக்கு தள்ளி நீரஜ் சோப்ரா முன்னிலை பெற்றார்.
பாட்செப்ஸ்ட்ரூம்,
தென்ஆப்பிரிக்காவின் பாட்செப்ஸ்ட்ரூம் நகரில் 2025-ம் ஆண்டுக்கான தடகள போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஈட்டி எறிதலுக்கான போட்டி மெக்ஆர்தர் ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. இதில், ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான நீரஜ் சோப்ரா வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு தகுதி பெறுவதற்கான போட்டி இந்த ஸ்டேடியத்திலேயே நடந்தது. இதில், அவர் தகுதி பெற்றார்.
இந்நிலையில், இன்று நடந்த போட்டியில் உள்ளூர்காரர்களான டவ் ஸ்மிட் மற்றும் டன்கன் ராபர்ட்சன் ஆகிய இருவரையும் பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றார்.
இந்த போட்டியில், ஸ்மிட் அதிக அளவாக 82.44 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில், 80 மீட்டர் தொலைவுக்கு கூடுதலாக ஈட்டி எறிந்த 6 பேரில் நீரஜ் மற்றும் ஸ்மிட் இருவரே உள்ளனர்.
நீரஜ் சோப்ராவின், தனிப்பட்ட சிறப்பான ஈட்டி எறிதல் மற்றும் இந்திய தேசிய சாதனையானது, 89.94 மீட்டர் என்ற அளவில் உள்ளது. 2022-ம் ஆண்டு ஸ்டாக்ஹோம் டையமண்ட் லீக் போட்டியில் இந்த சாதனையை அவர் ஏற்படுத்தினார்.