உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரான்ஸ் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

கோப்புப்படம்
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
பாரீஸ்,
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். இதுவரை 17 அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதற்கான தகுதி சுற்று போட்டிகள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் ஐரோப்பிய மண்டலத்துக்கான தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 54 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக தகுதி பெறும்.
இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘டி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் அணி, அசர்பைஜானை எதிர்கொண்டது. இதில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அசர்பைஜானை பந்தாடி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்து முதலிடத்தில் நீடிக்கிறது.
பிரான்ஸ் அணியில் எம்பாப்பே (45-வது நிமிடம்), அட்ரியன் ராபியோட் (69-வது நிமிடம்), பிளோரியன் தவ்வின் (84-வது நிமிடம்) கோல் அடித்தனர். சர்வதேச போட்டியில் 53-வது கோலை அடித்த எம்பாப்பே 83-வது நிமிடத்தில் வலது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். இதனால் அவர் நாளை நடக்கும் ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடுகிறார்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் உக்ரைன் அணி 5-3 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் ஜெர்மனி (ஏ பிரிவு) அணி 4-0 என்ற கோல் கணக்கில் லக்சம்பர்க்கையும், சுவிட்சர்லாந்து (பி பிரிவு) அணி 2-0 என்ற கோல் கணக்கில் சுவீடனையும் தோற்கடித்தது.






