பெண்கள் ஐரோப்பிய கால்பந்து: சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேற்றம்

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
பெர்ன்,
14-வது பெண்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பெர்ன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியன் ஸ்பெயின் அணி, போட்டியை நடத்தும் சுவிட்சர்லாந்துடன் மோதியது .
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 9-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஸ்பெயின் வீராங்கனை மரரியானா வீணடித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
66-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி முதல் கோல் அடித்தது. மாற்று வீராங்கனையாக களம் கண்ட அதினியா டெல் காஸ்டிலோ கோலடித்தார். 71-வது நிமிடத்தில் இன்னொரு ஸ்பெயின் வீராங்கனை கிளாடியா பினா கோலடித்து அணியின் முன்னிலையை 2-0 என்ற கணக்கில் அதிகரித்தார்.
கடைசி வரை போராடியும் சுவிட்சர்லாந்து அணியால் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை. முடிவில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.