பெண்கள் ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


பெண்கள் ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

image courtesy: UEFA Women's EURO 2025 twitter

ஸ்பெயின் அணி கூடுதல் நேரத்தில் ஜெர்மனியை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

சூரிச்,

14-வது பெண்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் சூரிச்சில் நேற்று முன்தினம் இரவு நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணி, 8 முறை ஐரோப்பிய சாம்பியனான ஜெர்மனியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் அதிக நேரம் வைத்து ஆதிக்கம் செலுத்தியதுடன் தாக்குதல் ஆட்டத்திலும் தீவிரம் காட்டினர். இருப்பினும் அவர்களால் ஜெர்மனி அணியின் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. ஸ்பெயின் அணியில் எஸ்தர், பினா ஆகியோர் முதல் பாதியில் கோல் அடிக்க எடுத்த முயற்சியை ஜெர்மனியின் கோல்கீப்பர் பெர்ஜர் முறியடித்தார். 41-வது நிமிடத்தில் மற்றொரு ஸ்பெயின் வீராங்கனை பாரிடிஸ் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு மயிரிழையில் வெளியேறியது.

கடைசி நிமிடத்தில் ஜெர்மனி அணியினர் கோல் வலையை நோக்கி அடுத்தடுத்து அடித்த இரு ஷாட்டுகளை ஸ்பெயின் கோல் கீப்பர் கேட்டா லாவகமாக தடுத்து நிறுத்தினார். வழக்கமான நேரத்தில் (90 நிமிடம்) இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் டிராவில் (சமனில்) முடிந்தது.

இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடுதல் நேரம் (30 நிமிடம்) ஒதுக்கப்பட்டது. இதில் 113-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை போன்மதி அருமையாக கோல் அடித்தார். முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஜெர்மனி அணியில், காலிறுதியில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதால் சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டை பெற்ற கேத்ரின், நுஸ்கின் ஆடமுடியாமல் போனதும், காயம் காரணமாக சாரா லின்டெர், ஜிலியா ஆகியோர் விலகியதும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஜெர்மனிக்கு எதிராக 9-வது முறையாக மோதிய ஸ்பெயின் அணி அதில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

மேலும் ஐரோப்பிய பெண்கள் கால்பந்து தொடரில் இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் கூடுதல் நேரத்துக்கு சென்றது இதுவே முதல் தடவையாகும். முன்னதாக இங்கிலாந்து - இத்தாலி அணிகள் மோதிய முதலாவது அரையிறுதியிலும் கூடுதல் நேரத்தில்தான் முடிவு கிடைத்தது.

பாசெல் நகரில் நாளை மறுநாள் அரங்கேறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 2023-ம்ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகள்தான் மோதின. அதில் ஸ்பெயின் மகுடம் சூடியது நினைவுகூரத்தக்கது.

1 More update

Next Story