மகளிர் ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்


மகளிர் ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம்

14-வது மகளிர் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்து வருகிறது.

பெர்ன்,

14-வது மகளிர் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் பாசெல் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் 8 முறை சாம்பியனான ஜெர்மனி, பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் 13-வது நிமிடத்தில் ஜெர்மனியின் நடுகள வீராங்கனை கேத்ரின் ஹென்ரிச், பிரான்ஸ் கேப்டன் கிரிட்ஜ் எம்பாக் தலைமுடியை பிடித்து இழுத்து தள்ளினார்.

இதனால் அவர் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அத்துடன் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த பெனால்டியை அந்த அணியின் கிரேஸ் கெயோரோ கோலாக மாற்றினார். அதன் பிறகு 10 வீராங்கனைகளுடன் ஆடிய ஜெர்மனி அணி மனம் தளராமல் போராடியது. 25-வது நிமிடத்தில் ஜெர்மனி வீராங்கனை நுஸ்கென் தலையால் முட்டி கோலடித்து 1-1 என்ற கணக்கில் சமநிலையை ஏற்படுத்தினார்.

69-வது நிமிடத்தில் ஜெர்மனி அணி முன்னிலை பெற பெனால்டி வாய்ப்பு கிட்டியது. அதனை பயன்படுத்தி அந்த அணி வீராங்கனை நுஸ்கென் அடித்த பந்தை பிரான்ஸ் கோல் கீப்பர் பவுலின் பெய்ராட் அபாரமாக தடுத்து தனது அணியை காப்பாற்றினார். 10 வீராங்கனைகளுடன் ஜெர்மனி ஆடியதால் கிடைத்த அனுகூலத்தை பயன்படுத்தி பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தினாலும் ஜெர்மனியின் தடுப்பு அரணை தகர்த்து மேலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை (டிரா) வகித்தன. இதைத்தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) கோல் எதுவும் விழவில்லை. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதல் 5 பெனால்டி வாய்ப்புகளில் இரு அணிகளும் தலா 4 கோல் அடித்ததால் சமநிலை நீடித்தது.

இதில் பிரான்ஸ் வீராங்கனை அமெல் மெஜ்ரி அடித்த முதல் ஷாட்டை அசத்தலாக தடுத்து நிறுத்திய ஜெர்மனி அணியின் கோல்கீப்பர் ஆன் காட்ரின் பெர்கர் 5-வது பெனால்டி வாய்ப்பை கோலாகவும் மாற்றி ஹீரோவாக ஜொலித்தார். இதனையடுத்து சடன்டெத் முறை அமலானது. 6-வது பெனால்டி வாய்ப்பை இரு அணிகளும் கோலாக்கின.

7-வது வாய்ப்பில் பிரான்ஸ் வீராங்கனை சோம்பாத் அடித்த பந்தை கோல் கீப்பர் பெர்கர் (ஜெர்மனி) பாய்ந்து தடுத்து வெளியேற்றினார். அடுத்து ஜெர்மனி அணி வீராங்கனை நுஸ்கென் கோலாக்கி தங்கள் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். பெனால்டி ஷூட்-அவுட்டில் ஜெர்மனி அணி 6-5 என்ற கோல் கணக்கில் பிரான்சை சாய்த்து 11-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

அத்துடன் பிரான்ஸ் அணி சர்வதேச போட்டியில் தொடர்ச்சியாக பெற்ற 11 வெற்றி வீறுநடைக்கும் முட்டுக்கட்டை போட்டது. சூரிச்சில் 23-ந் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி, உலக சாம்பியன் ஸ்பெயினை சந்திக்கிறது.

1 More update

Next Story