மகளிர் ஐரோப்பிய கால்பந்து: பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து

Image Courtesy: @WEURO2025
இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பாசெல்,
14-வது மகளிர் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) சுவிட்சர்லாந்தில் நடந்தது. இதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் உலக சாம்பியன் ஸ்பெயினும், நடப்பு ஐரோப்பிய சாம்பியன் இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இவர்களில் யாருக்கு மகுடம் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் பாசெல் நகரில் நேற்று நடைபெற்றது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் அணி (25வது நிமிடம்) ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட இங்கிலாந்து அணி (57வது நிமிடம்) பதில் கோல் திருப்பி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தது. இதையடுத்து இரு அணியினரும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. கூடுதல் நேரத்திலும் இரு அணியினரும் கோல் அடிக்காததால் வெற்றியாளரை தீர்மானிக்கு பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் அபாரமாக செயல்பட்ட இங்கிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2023-ம்ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினிடம் இங்கிலாந்து கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.