கால்பந்து உலகில் மற்றுமொரு மாபெரும் சாதனை படைத்த ரொனால்டோ

image courtesy:twitter/@AlNassrFC_EN
அல் நாசர் அணிக்காக ரொனால்டோ 100 கோல்கள் அடித்துள்ளார்.
ஹாங்காங்,
12-வது சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் அல் ஆலி- அல் நாசர் அணிகள் ஹாங்காங்கில் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அல் ஆலி 5-3 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அல்-நாசர் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 41-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் சவுதிஅரேபியாவின் அல் நாசர் கிளப்புக்காக ஆடும் ரொனால்டோ அந்த அணிக்காக அடித்த 100-வது கோலாக பதிவானது.
இதன் மூலம் கால்பந்து உலகில் 4 கிளப் அணிகளுக்காக 100 கோல்களை பதிவு செய்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை ரொனால்டோ படைத்தார். முன்னதாக அவர் ரியல் மாட்ரிட் கிளப்புக்கு (ஸ்பெயின்) 450 கோல்களும், மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு (இங்கிலாந்து) 145 கோல்களும், யுவென்டசுக்கு (இத்தாலி) 101 கோல்களும் அடித்திருந்தார். கால்பந்து போட்டியில் ரொனால்டோ பல அசத்தல் சாதனைகளை படைத்து வருகிறார். அதில் தற்போது இதுவும் இணைந்துள்ளது.
சர்வதேச கால்பந்து போட்டியிலும் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 40 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ (221 ஆட்டங்களில் 138 கோல்) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.