மைதானத்தில் கண்கலங்கிய மெஸ்ஸி..காரணம் என்ன ? வைரல் வீடியோ

நடப்பு தகுதி சுற்றில் உள்ளூரில் அர்ஜென்டினா அணிக்கு கடைசி ஆட்டம் இதுவாகும்.
அட்லான்டிகோ,
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த கால்பந்து திருவிழாவுக்கு போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும்.
உலகக் கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. இதில் தென் அமெரிக்க மண்டல அணிகளுக்கான தகுதி சுற்று போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். ஏற்கனவேஅர்ஜென்டினா, பிரேசில், ஈகுவடார் ஆகிய அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன.
இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, வெனிசுலாவை சந்தித்தது. இதில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் அதிக நேரம் வைத்து ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை தோற்கடித்தது. அர்ஜென்டினா அணியில் கேப்டன் லயோனல் மெஸ்சி (39-வது மற்றும் 80-வது நிமிடம்) 2 கோலும், லாட்டாரோ மார்டினெஸ் (76-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர்.
நடப்பு தகுதி சுற்றில் உள்ளூரில் அர்ஜென்டினா அணிக்கு கடைசி ஆட்டம் இதுவாகும். அத்துடன் 38 வயதான மெஸ்சிக்கு சொந்த மண்ணில் இதுவே கடைசி ஆட்டமாக இருக்கும் என்று கருதப்படுவதால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த ஆட்டத்தை காண ஸ்டேடியத்தில் திரண்டு திரண்டனர் .
சொந்த மண்ணில் கடைசி போட்டியில் விளையடுவதால் மெஸ்ஸி கண்கலங்கினார் . ரசிகர்கள் மெஸ்ஸியின் பெயரை உச்சரித்து ஆரவாரம் செய்தபோது அவர் கண்கலங்கினார்.
அடுத்த உலகக்கோப்பையில் விளையாடுவது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை என கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.