இந்திய பயணத்தை உறுதி செய்தார் லயோனல் மெஸ்சி


இந்திய பயணத்தை உறுதி செய்தார் லயோனல் மெஸ்சி
x

கோப்புப்படம்

இந்திய ரசிகர்களை சந்திப்பதை ஆர்வமுடன் எதிர்நோக்கி இருப்பதாக அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரான அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி 2011-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறார். இதன்படி டிசம்பர் 13-ந்தேதி கொல்கத்தாவுக்கு செல்லும் மெஸ்சி அங்கு சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடக்கும் ‘கோட் இசை நிகழ்ச்சி மற்றும் கோட் கோப்பை’ கண்காட்சி போட்டியில் பங்கேற்கிறார்.

இந்த ஜாலி கொண்டாட்டத்தில் சவுரவ் கங்குலி (கிரிக்கெட்), பாய்சுங் பூட்டியா (கால்பந்து), லியாண்டர் பெயஸ் (டென்னிஸ்) உள்ளிட்ட இந்திய பிரபலங்களும் அவருடன் இணைவார்கள் என்று தெரிகிறது. தொடர்ந்து அங்கு அவரது 25 அடி உயர சிலை திறக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் கட்டணம் ரூ.3,500-ல் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆமதாபாத், மும்பை செல்லும் அவர் இறுதியில் டிசம்பர் 15-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடுவதுடன் அவரது சுற்றுப்பயணம் நிறைவடைகிறது.

தனது பயணத்தை உறுதி செய்து 38 வயதான மெஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவுக்கு செல்ல இருப்பது எனக்கு மிகப்பெரிய கவுரவம். இந்தியா சிறப்பு வாய்ந்த ஒரு நாடு. 14 ஆண்டுக்கு முன்பு நான் அங்கு சென்றிருந்த போது பெற்ற நல்ல நினைவுகள் எனக்குள் இன்னும் இருக்கிறது. இந்தியா கால்பந்தை நேசிக்கும் ஒரு தேசம். ரசிகர்கள் அற்புதமானவர்கள். எனது கால்பந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன், புதிய தலைமுறை ரசிகர்களை சந்திப்பதை ஆர்வமுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்றார்.

முன்னதாக மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி அடுத்த மாதம் (நவம்பர்) கேரளாவுக்கு வந்து நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாடும் திட்டமும் உள்ளது.

1 More update

Next Story