இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக காலித் ஜமில் நியமனம்


இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக காலித் ஜமில் நியமனம்
x
தினத்தந்தி 2 Aug 2025 1:15 AM IST (Updated: 2 Aug 2025 1:16 AM IST)
t-max-icont-min-icon

இந்திய சீனியர் கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக காலித் ஜமில் நேற்று அறிவிக்கப்பட்டார்.

புதுடெல்லி,

இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஒரு ஆண்டாக இருந்து வந்த மனோலா மார்கஸ் (ஸ்பெயின்) கடந்த மாதம் முதல் வாரத்தில் தனது பதவியில் இருந்து விலகினார். ஆசிய கோப்பை தகுதி சுற்றில் தரவரிசையில் பின்தங்கிய ஹாங்காங்க்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி (0-1) தோல்வியை சந்தித்த பிறகு எழுந்த கடும் விமர்சனங்களை தொடர்ந்து அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துடன் சுமூகமாக பேசி விலகினார். அவரது வழிகாட்டுதலில் இந்திய அணி 8 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 4 ஆட்டங்களில் டிராவும், 3 ஆட்டங்களில் தோல்வியும் சந்தித்தது.

இதைத் தொடர்ந்து இந்திய கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை அடையாளம் காணுவதற்கான தேடுதல் வேட்டையை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சமீபத்தில் தொடங்கியது. இந்த பதவிக்கு வெளிநாட்டினர் உள்பட மொத்தம் 170 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த முன்னாள் வீரர் ஐ.எம்.விஜயன் தலைமையிலான டெக்னிக்கல் கமிட்டி அதில் இருந்து காலித் ஜமில் (இந்தியா), முன்னாள் பயிற்சியாளரான ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து), ஸ்டீபன் தர்கோவிச் (சுலோவக்கியா) ஆகிய 3 பேரின் பெயர்களை இறுதி செய்து அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு பரிந்துரை செய்தது.

இந்த நிலையில் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு முடிவின் படி, இந்திய சீனியர் கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக காலித் ஜமில் நேற்று அறிவிக்கப்பட்டார். கடந்த 13 ஆண்டுகளில் இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டில் இந்தியாவை சேர்ந்த சவியோ மெடீரா தலைமை பயிற்சியாளராக பதவி வகித்தார்.

48 வயது முன்னாள் வீரரான காலித் ஜமில் இந்திய அணிக்காக 40 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் உள்ளூர் போட்டிகளில் ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஜாம்ஷெட்பூர் உள்பட பல்வேறு முன்னணி அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.

நேஷன்ஸ் கோப்பைபோட்டியில் இருந்து...

மத்திய ஆசிய கால்பந்து சங்கம் சார்பில் நேஷன்ஸ் கோப்பை சர்வதேச கால்பந்து போட்டி தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து காலித் ஜமில் தனது தலைமை பயிற்சியாளர் பணியை தொடங்குகிறார்.

1 More update

Next Story