ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் நிறுத்தி வைப்பு

Image Courtesy: @IndSuperLeague
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
புதுடெல்லி,
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டி வழக்கமாக செப்டம்பரில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். இந்த சீசனுக்கான (2025-26) ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க வேண்டும்.
இந்த நிலையில் இந்த சீசனுக்கான போட்டி நிறுத்தி வைக்கப்படுவதாக போட்டியை நடத்தும் கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் நேற்று அறிவித்தது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்துக்கும், அகில இந்திய கால்பந்து சங்கத்துக்கும் இடையிலான பிரதான உரிமைகள் ஒப்பந்தம் வருகிற டிசம்பர் 8-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டவில்லை. ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் போட்டியை தொடர்ந்து நடத்துவற்கான நடவடிக்கைகளை எடுக்க இயலாது என்பதால் இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.