ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய ஜாம்ஷெட்பூர் எப்.சி.

Image Courtesy: @IndSuperLeague / @JamshedpurFC / @NEUtdFC
அரையிறுதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி, மோகன் பகான் அணியை எதிர்கொள்கிறது.
ஷில்லாங்,
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பங்கேற்ற 13 அணிகள் தங்களுக்குள் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், எப்.சி. கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின.
புள்ளிப்பட்டியலில் 3 முதல் 6-வது இடங்களை பெற்ற பெங்களூரு எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி., மும்பை சிட்டி எப்.சி. ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் மும்பையை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அரையிறுதிக்கு முன்னேறியது.
பெங்களூரு எப்.சி. அணி அரையிறுதி ஆட்டத்தில் எப்.சி. கோவாவை சந்திக்க உள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது வெளியேற்றுதல் சுற்றில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. - ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின. இந்த போட்டியின் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சிகள் செய்தனர். இதற்கு பலனாக ஆட்டம் முடியும் தருவாயில் ஜாம்ஷெட்பூர் அணி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது. இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.-யை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி, மோகன் பகான் அணியை எதிர்கொள்கிறது.