ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. வெற்றி

image courtesy: Indian Super League twitter
நேற்று நடைபெற்ற அரையிறுதியின் முதலாவது சுற்றில் பெங்களூரு அணி, எப்.சி. கோவா அணியை எதிர் கொண்டது.
பெங்களூரு,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்றுகள் முடிவில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், எப்.சி. கோவா, பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஒவ்வொரு அரையிறுதியும் இரண்டு ஆட்டங்கள் (உள்ளூர், வெளியூர்) கொண்டதாக நடத்தப்படுகிறது.
இதில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அரையிறுதியின் முதலாவது சுற்றில் பெங்களூரு அணி, எப்.சி. கோவா அணியை எதிர் கொண்டது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவாவை வீழ்த்தியது. 42-வது நிமிடத்தில் கோவா அணியின் சந்தேஷ் ஜிங்கன் பந்தை தடுக்க முயற்சிக்கையில் தவறுதலாக பந்து அவர் மீது பட்டு கோல் வலைக்குள் சென்று சுய கோலாக மாறியது.
பெங்களூரு அணியின் எட்கர் மென்டேஸ் 51-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இவ்விரு அணிகளும் அரையிறுதியின் 2-வது சுற்றில் வருகிற 6-ந்தேதி மீண்டும் மோதுகின்றன. இதில் பெங்களூரு அணி 'டிரா' செய்தாலே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடலாம்.
இதைத் தொடர்ந்து ஜாம்ஷெட்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு அரைஇறுதியின் முதலாவது சுற்றில் ஜாம்ஷெட்பூர்- மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.