நிதி பற்றாக்குறை காரணமாக பிரபல பயிற்சியாளரை நிராகரித்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு

image courtesy:twitter/@IndianFootball
ஜாவி ஹெர்னாண்டஸ் பார்சிலோனா அணியில் ஆண்டுக்கு ரூ.81 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்பெயினின் மனோலோ மார்கஸ், சமீபத்தில் ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் ஹாங்காங்கிடம் இந்திய அணி தோற்றதன் எதிரொலியாக பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பயிற்சியாளர் தேடுதல் வேட்டையை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தொடங்கியது. பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து 170 பேர் விண்ணப்பம் அனுப்பி இருந்தனர்.
விண்ணப்பங்களை முன்னாள் கேப்டன் விஜயன் தலைமையிலான இந்திய கால்பந்து தொழில்நுட்ப கமிட்டி பரிசீலனை செய்து, ஸ்டீபன் கான்ஸ்டான்டின் (இங்கிலாந்து), ஸ்டீபன் டார்கோவிச் (சுலோவக்கியா), காலித் ஜமில் (இந்தியா) ஆகிய 3 பேரை இறுதி செய்துள்ளது. இவர்களில் ஒருவர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்.
இதனிடையே இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரபல பயிற்சியாளர் ஜாவி ஹெர்னாண்டஸ் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும் அவரது விண்ணப்பத்தை இந்திய கால்பந்து கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
ஜாவியை ஏற்க எங்களுக்கு ஆர்வம் இருந்தாலும், நிறைய பணம் தேவைப்படுகிறது என இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜாவி ஹெர்னாண்டஸ் பார்சிலோனா அணியில் ஆண்டுக்கு ரூ.81 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.