2026 உலகக் கோப்பை போட்டியில் ஆட விரும்புகிறேன்: மெஸ்சி

தொடர்ச்சியாக எழுந்த கேள்விகளுக்கு அவரே தற்போது விடை அளித்துள்ளார்
நியூயார்க்,
48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி விளையாடுவாரா? அல்லது உடல்தகுதியை காரணம் காட்டி ஒதுங்கி விடுவாரா? என தொடர்ச்சியாக எழுந்த கேள்விகளுக்கு அவரே தற்போது விடை அளித்துள்ளார். 38 வயதான மெஸ்சி அளித்த ஒரு பேட்டியில்,
‘உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவது மகத்தானது. நானும் அதில் பங்கெடுக்கவே விரும்புகிறேன். நான் நல்ல உடல்தகுதியுடன் தேசிய அணிக்கு எனது பங்களிப்பை அளிப்பது முக்கியமானதாகும்.
நான் 100 சதவீதம் உடல் தகுதியுடன் இருக்கிறேனா என்பதை பார்க்க வேண்டும். என்னால் பங்களிக்க முடியும் என்று நினைத்தால், அதன் பிறகு உலகக் கோப்பையில் ஆடுவது குறித்து முடிவு செய்வேன். உண்மையில் நான் உலகக் கோப்பையில் ஆட ஆவலாக இருக்கிறேன். இந்த முறை நாங்கள் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் இறங்கப்போகிறோம். அதனை தக்கவைக்க முடிந்தால், அற்புதமாக இருக்கும்’ என்றார்.






