அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேரளா வருகை தள்ளிவைப்பு

கோப்புப்படம்
மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த மாதம் (நவம்பர்) கேரளா வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
புதுடெல்லி,
நடப்பு உலக சாம்பியனான லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த மாதம் (நவம்பர்) கேரளா வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பயணத்தின் போது அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி கொச்சியில் நவம்பர் 17-ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அர்ஜென்டினா அணியின் கேரளா வருகை திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனமும், இந்த போட்டியை ஏற்பாடு செய்து வரும் நிறுவனமும் தெரிவித்துள்ளன.
இது குறித்து இந்த போட்டியை ஏற்பாடு செய்து வரும் தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘சர்வதேச கால்பந்து சங்கத்திடம் (பிபா) இருந்து போட்டிக்கான ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத்துடன் கலந்து ஆலோசித்ததில் கொச்சியில் நவம்பரில் நடக்க இருந்த நட்புறவு கால்பந்து போட்டியை தள்ளிவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






