பெண்கள் டி20 உலகக் கோப்பை: போட்டி அட்டவணை அறிவிப்பு


பெண்கள் டி20 உலகக் கோப்பை: போட்டி அட்டவணை அறிவிப்பு
x

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை (ஜூன் 14-ந் தேதி) பர்மிங்காமில் சந்திக்கிறது

துபாய்,

10-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2026) ஜூன் 12-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. பர்மிங்காம், சவுத்தாம்டான், ஹெட்டிங்லே, ஓல்ட் டிராப்போர்ட், ஓவல், பிரிஸ்டல், லார்ட்ஸ் ஆகிய இடங்களில் போட்டி அரங்கேறுகிறது. 24 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மொத்தம் 33 போட்டிகள் நடக்கின்றன.

இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 10-ல் இருந்து 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல் 6 முறை சாம்பியன் ஆஸ்திரேலியா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த தென்ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. தகுதி சுற்று மூலம் முன்னேறும் 2 அணிகளும் இந்த பிரிவில் சேரும்.

குரூப் 2-ல் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் தகுதி சுற்று மூலம் ஏற்றம் காணும் 2 அணிகள் இடம் பெறும்.

இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை (ஜூன் 14-ந் தேதி) பர்மிங்காமில் சந்திக்கிறது. அடுத்த ஆட்டத்தில் தகுதி சுற்று மூலம் நுழையும் அணியை (ஜூன் 17-ந் தேதி) ஹேட்டிங்லேவில் எதிர்கொள்கிறது. 3-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை (ஜூன் 21-ந் தேதி) ஓல்ட் டிராப்போர்ட்டிலும், 4-வது ஆட்டத்தில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் பெறும் அணியை (ஜூன் 25-ந் தேதி) ஓல்ட் டிராப்போர்ட்டிலும், 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை (ஜூன் 28-ந் தேதி) லார்ட்சிலும் சந்திக்கிறது. அனைத்து லீக் ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

1 More update

Next Story