தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்


தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
x

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் இன்று தொடங்குகிறது.

கவுகாத்தி,

இந்தியாவுக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

முதலாவது டெஸ்டின் 2-வது நாள் ஆட்டத்தின் போது கழுத்து பிடிப்பால் இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அணிக்கு திரும்பிய அவர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. இதையடுத்து அவர் அணியில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். காயத்தின் தீவிரதன்மையை மேலும் ஆராய்வதற்காக மும்பைக்கு செல்ல உள்ளார். இதனால் துணை கேப்டன் ரிஷப் பண்ட் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தப்போகும் 38-வது கேப்டன் என்ற பெருமையை பண்ட் பெறுகிறார். சுப்மன் கில் இடத்தில் சாய் சுதர்சன் களம் காணுகிறார். இதே போல் அக்‌ஷர் பட்டேலுக்கு பதிலாக நிதிஷ்குமார் ரெட்டி இடம் பெறுவார் என தெரிகிறது.

தென்ஆப்பிரிக்க அணியில், விலாபகுதியில் ஏற்பட்ட காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா கொல்கத்தா டெஸ்டில் ஆடவில்லை. இந்த டெஸ்டிலும் அவர் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த அணியில் அனேகமாக மாற்றம் ஏதும் இருக்காது. 2000-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் முதல்முறையாக தொடரை வெல்லும் முனைப்புடன் வியூகங்களை வகுத்துள்ளனர்.

கவுகாத்தியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். அதிக பரிச்சயம் இல்லாத ஒரு மைதானம் என்பதால் இந்திய வீரர்களுக்கும் இந்த ஆடுகளம் கடும் சவாலாகத் தான் இருக்கும். இங்கு நடந்துள்ள ஒரு நாள் மற்றும் டி20போட்டிகளில் ரன் மழை பொழியப்பட்டு இருப்பதால் ஆடுகளம் தொடக்கத்தில் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு மாநிலமான இங்கு சூரியன் சீக்கிரம் மறைந்து விடுவதால் இந்த டெஸ்ட் போட்டி அரைமணி நேரத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கே தொடங்குகிறது. அதே போல் வழக்கத்துக்கு மாறாக முதலில் தேனீர் இடைவேளையும், பிற்பகலில் மதிய உணவு இடைவேளையும் விடப்படுகிறது.

காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

1 More update

Next Story