ஜடேஜா, சுந்தர் சதத்தை நெருங்கிய சமயத்தில் டிரா கேட்டது ஏன்..? இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளக்கம்

image courtesy:PTI
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
மான்செஸ்டர்,
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதம் அடித்தனர்.
311 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து இருந்தது. கே.எல். ராகுல் 87 ரன்களுடனும், சுப்மன் கில் 78 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த சூழலில் நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 137 ரன்கள் எடுத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் ராகுல், சுப்மன் கில் தொடர்ந்து பேட் செய்தனர். இருவரும் பொறுமையான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் ராகுல் 90 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல்-சுப்மன் கில் இணை 188 ரன்கள் திரட்டியது.
இதைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் வந்தார். நிலைத்து நின்று ஆடிய கேப்டன் சுப்மன் கில் 228 பந்துகளில் தனது 9-வது சதத்தை எட்டினார். நடப்பு தொடரில் அவர் அடித்த 4-வது சதம் இதுவாகும். சதம் அடித்த சற்று நேரத்தில் சுப்மன் கில் (103 ரன்கள்) அவுட்டானார்.
அடுத்து ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்தார். இருவரும் விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்ற நோக்குடன் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கும் ஓடவிட்டனர். இந்த ஜோடியில் ரவீந்திர ஜடேஜா, ஹாரி புரூக் பந்து வீச்சில் சிக்சர் தூக்கி தனது 5-வது சதத்தை கடந்தார். அடுத்த ஒரு ஓவர் கழித்து வாஷிங்டன் சுந்தர் தனது முதல் சதத்தை எட்டினார். அத்துடன் ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 143 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்து 114 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 107 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். சதம் அடித்ததுடன் 6 விக்கெட்டும் எடுத்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
முன்னதாக இந்த போட்டி டிராவில் முடிவதற்கு 5 ஓவருக்கு முன்பாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை டிராவில் முடிக்க முன்வந்தார். மேலும் இது குறித்து ஜடேஜாவிடம் பேசினார். ஆனால் அந்த சமயத்தில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதம் அடிக்கும் நிலையில் இருந்தனர். இதனால் டிராவை தள்ளி போட்டனர். இதனால் இரு அணியினருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் முன்கூட்டியே டிரா கேட்டது ஏன்? என்பது குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளக்கமளித்துள்ளார்.
அதில், "எல்லா கடின உழைப்பையும் இந்தியாதான் செய்தது என்று நினைக்கிறேன். சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோர் அற்புதமாக விளையாடினார்கள். அதன் காரணமாக ஒரே ஒரு முடிவு மட்டுமே (டிரா) கிடைக்கப் போகிறது என்று தெரிந்தது. அது போன்ற சூழ்நிலையில் என்னுடைய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களை இன்னும் ஒரு மணி நேரம் விளையாட வைத்து காயமாக்கும் ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை. இந்திய அணி அழுத்தத்திற்கு நிகராக விளையாடினார்கள். ஒரு போட்டி மீதம் இருப்பதால் என்னுடைய பவுலர்களை நான் ரிஸ்க் எடுக்க வைக்க விரும்பவில்லை. அதனால்தான் டிரா கேட்டேன்" என்று கூறினார்.