கண்களுக்கு கீழ் கருப்பு பட்டை தீட்டியது ஏன்..? ஸ்டீவ் ஸ்மித் விளக்கம்


கண்களுக்கு கீழ் கருப்பு பட்டை தீட்டியது ஏன்..? ஸ்டீவ் ஸ்மித் விளக்கம்
x

ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின்போது ஸ்டீவ் சுமித் தனது கண்களுக்கு கீழாக சிறிய பட்டை போன்று கருப்பு வர்ணத்தை தீட்டி இருந்தார்

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 325 ரன்கள் குவித்துள்ளது. ரூட் 135 ரன்களுடனும், ஆர்ச்சர் 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான பயிற்சியின்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வித்தியாசமாக தனது கண்களுக்கு நேர் கீழாக சிறிய பட்டை போன்று கருப்பு வர்ணத்தை தீட்டி இருந்தார். இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்பால் இதே போன்ற கருப்பு பட்டையுடன் விளையாடி இருக்கிறார்.

இது குறித்து ஸ்டீவ் ஸ்மித்திடம் இந்த போட்டிக்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு விளக்கமளித்த ஸ்மித், “சந்தர்பாலுக்கு நான் மெசெஜ் அனுப்பி இது குறித்து கேட்டேன். அதற்கு அவர் இவ்வாறு கண்ணுக்கு கீழ் பகுதியில் கருப்பு வர்ணம் இருக்கும்போது, கண்களை கூசும் வகையிலான ஒளி 65 சதவீதம் தடுக்கப்படுவதாக சொன்னார். அது உண்மைதான் என்பதை பயிற்சியின் போது நானும் உணர்ந்தேன். மேலும் அவர் உங்களது புகைப்படங்களை பார்த்தேன். அதை தவறாக வரைந்துள்ளீர்கள் என்று கூறினார். இப்போது அதை சரி செய்து விட்டேன்” என்று கூறினார்.

1 More update

Next Story