அப்போது கம்பீரை பாராட்டாதவர்கள் இப்போது மட்டும் திட்டுவது ஏன்..? கவாஸ்கர் கேள்வி

ஒரு பயிற்சியாளரால் அணியை தயார்படுத்த மட்டுமே முடியும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 - 0 (3 கணக்கில்) என்ற கணக்கில் தங்களது சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் 2 - 0 (2 போட்டிகள்) என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது. அதன் வாயிலாக 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது.
இந்த தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடாதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதை விட தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சோதனை அடிக்கடி செய்யும் மாற்றங்கள், தவறான தேர்வுகள் ஆகியவையும் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை 19 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது. இதனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்ற போது கம்பீரை பாராட்டாதவர்கள் இப்போது மட்டும் திட்டுவது ஏன்? என்று இந்திய முன்னாள் ஜாம்பவான் சுனில் காவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஒரு பயிற்சியாளரால் அணியை தயார்படுத்த மட்டுமே முடியும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “அவர் (கம்பீர்) ஒரு பயிற்சியாளர். பயிற்சியாளரால் அணியைத் தயார் செய்ய மட்டுமே முடியும். களத்தில் விளையாம் வீரர்கள்தான் நல்ல ஆட்டத்தைக் கொடுக்க வேண்டும். தோல்விக்கு கம்பீர் பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு என்னுடைய கேள்வி என்னவெனில், அவர் தலைமையில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர் தலைமையில் இந்தியா ஆசியக் கோப்பையை வென்றபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?.
“அப்போது நீங்கள் எதுவும் சொன்னீர்களா?. அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவரது பதவிக்காலம் வாழ்நாள் முழுவதும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்களா? நீங்கள் அதை சொல்லவில்லை. ஒரு அணி சிறப்பாக செயல்படாதபோதுதான் நீங்கள் பயிற்சியாளரை குறை சொல்கிறீர்கள்.
பிரெண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து அணியின் மூன்று வடிவங்களுக்கும் (டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள்) பயிற்சியாளராக உள்ளார். பல நாடுகளில் அனைத்து வடிவங்களுக்கும் ஒரு பயிற்சியாளர் இருக்கிறார். ஆனால் அணி தோல்வியடைந்தால் மட்டுமே நாம் ஒருவரைப் பார்த்து விரல் நீட்டுகிறோம்.
சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசியக் கோப்பை வெற்றிக்கு நீங்கள் அவருக்குப் பெருமை சேர்க்கத் தயாராக இல்லை என்றால், அந்த 22-யார்டு போட்டியில் அணி சிறப்பாகச் செயல்படவில்லை என்பதற்காக அவரை ஏன் குறை கூற விரும்புகிறீர்கள் என்று சொல்லுங்கள். ஏன் அவரைக் குறை கூறுகிறீர்கள்?” என்று கூறினார்.






