சென்னை அணியில் தோனிக்குப்பின் விக்கெட் கீப்பர் யார்..? ரெய்னா விமர்சனம்

image courtesy:PTI
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு சீசனில் 9-வது லீக் போட்டியில் விளையாடிய சென்னை அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும். வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது. இதனால் அந்த அணியை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தோனிக்குப்பின் சென்னை அணியின் விக்கெட் கீப்பர் யார்? என்று இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பியுள்ளார். ஏனெனில் சென்னை நிர்வாகம் ஏலத்தின்போது இஷான் கிஷன், ரிஷப் பண்ட் போன்ற விக்கெட் கீப்பர் யாரையும் வாங்காமல் தவறு செய்து விட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "சென்னை அணி ஏலத்தின்போது இஷான் கிஷான் மற்றும் ரிஷப் பண்டை வாங்க முயற்சிக்கவில்லை. இதனால் சென்னை அணிக்கு இது நல்ல ஏலம் இல்லை. தோனிக்குப் பிறகு சென்னை அணியின் விக்கெட் கீப்பராக யார் இருப்பார்கள்? அவரது இடத்தைப் பிடிக்கக்கூடிய யாரும் அவர்களிடம் இல்லை. பேட்ஸ்மேன்கள் நிறைய டாட் பால்களை விளையாடுகிறார்கள். உண்மையில், இந்த சீசனில் சென்னை அணி அதிக டாட் பால்களை விளையாடியுள்ளது.
டாப் ஆர்டரிலிருந்து எந்த உதவியும் கிடைக்காததால், மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆட முடியவில்லை. டெவன் கான்வே நல்ல பார்மில் இருந்தார், ஆனால் அவர் தனது தந்தையின் மறைவு காரணமாக அணியை விட்டு வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் 4வது இடத்தில் பேட்டிங் செய்கிறார்கள் என்றால், அது அணியின் குறைபாடுகளை எடுத்துக்காட்டுகிறது" என்று கூறினார்.