பவர் பிளே ஓவர்களில் நன்றாக பவுலிங் செய்தோம் ஆனால்... - சுப்மன் கில் பேட்டி


பவர் பிளே ஓவர்களில் நன்றாக பவுலிங் செய்தோம் ஆனால்... - சுப்மன் கில் பேட்டி
x

Image Courtesy: @IPL

தினத்தந்தி 23 May 2025 10:50 AM IST (Updated: 23 May 2025 11:24 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 235 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 117 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 33 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 57 ரன் எடுத்தார்.

இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது மிட்செல் மார்ஷ்க்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நாங்கள் கூடுதலாக 15-20 ரன்கள் கொடுத்துவிட்டோம். லக்னோவை நாங்கள் 210 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முயற்சித்தோம். 210 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதற்கும் 230 ரன்கள் கொடுத்து கட்டுப்படுத்துவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

நாங்கள் பவர் பிளே ஓவர்களில் நன்றாக பவுலிங் செய்தோம். ஆனால், அங்கே விக்கெட்டுகளை எடுக்கவில்லை. பவர்பிளே ஓவர்கள் கடந்த பின் எஞ்சிய 14 ஓவர்களில் எதிரணி 180 ரன்கள் அடித்தார்கள். அது மிகவும் அதிகமானது. இன்றைய போட்டியில் 17 ஓவர்கள் வரை நாங்கள் பேட்டிங்கில் நன்றாகவே செயல்பட்டோம். 240 ரன்களை துரத்துவது எளிது கிடையாது.

இன்று எங்களுக்கு தோல்வி கிடைத்தாலும் நிறைய நேர்மறையான விஷயங்கள் கிடைத்தன. குறிப்பாக ஷாருக்கான் மற்றும் ரூதர்போர்ட் ஆகியோருடைய பேட்டிங் மிகப்பெரிய நேர்மறையாகும். மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவதே பிளே ஆப் சுற்றில் அசத்துவதற்கு தேவையான சாவியாகும். பிளே ஆப் சுற்றுக்கு முன்பாக நாங்கள் மீண்டும் எப்படியாவது வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story