விராட் கோலியா - சச்சினா..? உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்? கவாஸ்கர் பதில்


விராட் கோலியா - சச்சினா..? உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்? கவாஸ்கர் பதில்
x

சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வடிவத்தில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

ராஞ்சி,

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று அரங்கேறியது. இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்கள் அடித்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 52-வது சதமாக பதிவானது.

அடுத்து 350 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 72 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்த ஆட்டத்தில் அடித்த சதத்தின் மூலம் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வடிவத்தில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார்.

சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் அடித்திருந்ததே ஒரு வடிவத்தில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சதங்களாக இருந்தது. தற்போது அதனை முந்தியுள்ள விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 52 சதங்களுடன் புதிய வரலாறு படைத்துள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா, தெண்டுல்கரா? என்ற விவாதம் எழுந்து உள்ளது.

இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “விராட் கோலியுடன் ஆடியவர்களும் அவருக்கு எதிராக விளையாடியவர்களும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ரிக்கி பாண்டிங்கும் அவரை ஒருநாள் போட்டியின் எல்லா கட்டத்திலும் சிறந்த வீரர் என்று மதிப்பிட்டார். ஆஸ்திரேலியர்களிடம் இருந்து பாராட்டுகளை பெறுவது மிகவும் கடினமானது. நீங்கள் தெண்டுல்கரை கடந்து செல்லும்போது இந்த மனிதர் எங்கே நிற்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்” என்று கூறினார்.

1 More update

Next Story