ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி...ஐ.பி.எல். வரலாற்றில் முதல் அணியாக மாபெரும் சாதனை படைத்த கொல்கத்தா


ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி...ஐ.பி.எல். வரலாற்றில் முதல் அணியாக மாபெரும் சாதனை படைத்த கொல்கத்தா
x

Image Courtesy: @KKRiders

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஐதராபாத் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 60 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 102 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 80 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமான க்ளாசென் 33 ரன் எடுத்தார்.

கொல்கத்தா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் முதல் அணியாக கொல்கத்தா மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது, ஐ.பி.எல். வரலாற்றில் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று 29-வது முறையாக மோதிய கொல்கத்தா அணி 20-வது வெற்றியை பெற்றது.

இதேபோல் பஞ்சாப்புக்கு எதிராக 21 ஆட்டத்திலும், பெங்களூருவுக்கு எதிராக 20 ஆட்டத்திலும் கொல்கத்தா அணி ஏற்கனவே வென்றுள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் மூன்று அணிகளுக்கு எதிராக 20 மற்றும் அதற்கு அதிகமான ஆட்டங்களில் வென்ற முதல் அணி என்ற சாதனையை கொல்கத்தா படைத்துள்ளது.


Next Story