குஜராத்துக்கு எதிரான வெற்றி... லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது என்ன...?

image courtesy: @IPL
குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மிட்செல் மார்ஷ் சதம் அடித்து அசத்தினார்.
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 235 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 117 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 33 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 57 ரன் எடுத்தார்.
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது மிட்செல் மார்ஷ்க்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது, உண்மையிலேயே இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு அணியாக நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும் என்பதை காட்டி உள்ளோம்.
ஒரு சமயத்தில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இதெல்லாம் கிரிக்கெட்டில் நடக்கக்கூடிய சகஜமான ஒன்றுதான். இந்த தொடரில் இருந்து பல்வேறு விசயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். இந்த தொடரில் எங்களது அணியில் நிறைய வீரர்கள் காயத்தால் விளையாட முடியாமல் போனது பாதிப்பை ஏற்படுத்தியது.
அதே வேளையில் மிட்செல் மார்ஷ், மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் போன்ற வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருவது எங்களது அணிக்கு பலம். அதேபோன்று பீல்டிங்கிலும் நாங்கள் நிறைய தவறுகளை செய்துள்ளோம். இதெல்லாம் திருத்திக் கொண்டு நிச்சயம் அடுத்த தொடரில் பலமாக திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.