இன்று ஐ.பி.எல். கிரிக்கெட் மினி ஏலம்

77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.
அபுதாபி,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஏலப்பட்டியலில் 240 இந்தியர், 110 வெளிநாட்டவர் என மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இப்போது மேலும் 19 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து 77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.
ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.125 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தக்க வைத்த வீரர்களுக்கான ஊதியம் போக மீதி தொகையை கொண்டு தான் மற்ற வீரர்களை வாங்க முடியும். அந்த வகையில் அதிகபட்சமாக முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 64.3 கோடி கையிருப்பு வைத்துள்ளது. அந்த அணி 13 வீரர்களை வாங்க வேண்டி உள்ளது.
5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சிடம் 43.4 கோடி இருப்பு இருக்கிறது. அவர்களுக்கு 4 வெளிநாட்டவர் உள்பட 9 வீரர்கள் தேவை. மும்பை இந்தியன்சிடம் குறைந்த தொகையாக ரூ.2½ கோடி மட்டுமே உள்ளது. 20 வீரர்களை தக்க வைத்துள்ள அந்த அணி இன்னும் 5 வீரர்களை எடுக்கலாம். ஒவ்வொரு அணியிலும் குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சமாக 25 வீரர்கள் வரை இடம் பெறலாம்.
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், ஜேக் பிராசர் மெக்குர்க், இந்தியாவின் வெங்கடேஷ் அய்யர், ரவி பிஷ்னோய், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோருக்கு கடும் கிராக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகும். இதே போல் பதிரானா (இலங்கை), குயின்டான் டி காக் (தென்ஆப்பிரிக்கா), சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் ரன்வேட்டை நடத்தும் சர்ப்ராஸ் கான் ஆகியோரும் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
இதில் தரமான ஆல்-ரவுண்டரான கேமரூன் கிரீனை தட்டித்தூக்க கொல்கத்தா, சென்னை அணிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அவரது விலை ரூ.25 கோடிக்கு மேல் எகிறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒருவேளை ரூ.25 கோடிக்கு ஏலம் போனாலும் அவருக்கு ரூ.18 கோடி மட்டுமே ஊதியமாக கிடைக்கும்.
மினி ஏலத்திற்கு என்று கிரிக்கெட் வாரியம் வகுத்துள்ள புதிய விதிமுறைப்படி வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டும் கட்டணத்தில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகபட்ச தக்கவைப்பு தொகை (ரூ.18 கோடி) அல்லது முந்தைய மெகா ஏலத்தில் அதிகபட்ச ஏலம் போன வீரரின் தொகை (ரிஷப் பண்ட் ரூ.27 கோடி) இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். எனவே மினி ஏலத்தில் கேமரூன் கிரீன் ரூ.25 கோடிக்கு மேல் ஏலம் போனாலும் அவருக்கு ரூ.18 கோடி மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள தொகை கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் நலநிதிக்கு பயன்படுத்தப்படும்.
பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் ஏல நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஏலத்தை மும்பையைச் சேர்ந்த மல்லிகா சாகர் நடத்துகிறார்.






