தோனி விக்கெட்: நான் வகுத்த திட்டம் இதுதான் - ஹர்ஷல் படேல்

image courtesy:PTI
சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்ஷல் படேல் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டிவால்ட் பிரெவிஸ் 42 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 30 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதைத்தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஐதராபாத் அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஹர்ஷல் படேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஹர்ஷல் படேல் பேசுகையில், "மிகவும் மகிழ்ச்சியான வெற்றி. இதனை கடந்த 3-5 ஆட்டங்களிலும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். கட்டாயம் அனைத்துப் போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் வெற்றிக்கு உதவியதில் மகிழ்ச்சி. போட்டியின் ஆரம்பத்திலேயே சரியான லென்த்தை கண்டுபிடித்து அதை தொடர்வது முக்கியம் என்று நினைத்தேன்.
என் பந்துவீச்சை எதிரணி பேட்ஸ்மேன்கள் ஸ்கொயர் லெக் மற்றும் மிட் விக்கெட் திசைக்கு மேலே அடிக்க விரும்பினேன். தோனிக்கு எதிராக லென்த் பந்துகளை வீசுவது என்னுடைய திட்டமாக இருந்தது. வைட் பந்து வீச முயற்சிக்கவில்லை. அவரை அவுட்டாக்கிய பந்து வித்தியாசமாக முயற்சித்த ஒரு வேரியசன் ஆகும். அது நன்றாக வரவில்லை என்றாலும் அந்த பந்து பீல்டர் கைகளில் சென்று விழுந்ததில் மகிழ்ச்சி.
கிரிக்கெட்தான் எல்லாமே என்று இல்லை. நான் மைதானத்திற்கு செல்லும்போது, கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறேன். நான் அதிலிருந்து மீண்டு வரும்போது ஒரு நல்ல தந்தையாகவும், நல்ல கணவனாகவும் இருக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.