லார்ட்ஸ் டெஸ்டின் மிகச்சிறந்த தருணம் இதுதான் - அஸ்வின் தேர்வு


லார்ட்ஸ் டெஸ்டின் மிகச்சிறந்த தருணம் இதுதான் - அஸ்வின் தேர்வு
x

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட் லார்ட்சில் நடைபெற்றது.

சென்னை,

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஜடேஜா 61 ரன்களுடன் (181 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதில் கடைசி விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் கைகோர்த்து விளையாடிய சிராஜ், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் வீசிய பந்தை தடுத்து ஆடினார். பந்து பேட்டில் பட்டு உருண்டு ஸ்டம்பை தட்டியது. இலக்கை நெருங்கிய தருவாயில் ஆட்டமிழந்ததால் விரக்தியடைந்த சிராஜ் மைதானத்தில் அப்படியே அமர்ந்துவிட்டார். இதனை கண்ட இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஜாக் கிராவ்லி சிராஜை நோக்கி வந்து ஆறுதல் கூறி தேற்றினர்.

இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்டில் தன்னை பொறுத்தவரை சிறந்த தருணம் சிராஜுக்கு இங்கிலாந்து வீரர்கள் ஆறுதல் கூறியதுதான் என்று இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "முகமது சிராஜ் ஆட்டமிழந்து மைதானத்தில் வருத்தமுடன் இருந்த வேளையில் இங்கிலாந்து வீரர்களான ஜாக் கிராவ்லி மற்றும் ஜோ ரூட் ஆகியோர் அவரிடம் வந்து அவரை சமாதானம் செய்தனர். அப்படி இங்கிலாந்து வீரர்கள் செய்தது உண்மையிலேயே இந்த போட்டியின் மிகச்சிறந்த தருணமாக நான் பார்க்கிறேன்.

சில நேரங்களில் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வில் நாம் சிக்கிக் கொள்கிறோம். நேரத்தை வீணடிக்கும் தந்திரோபாயங்கள் விளையாட்டின் ஒரு பகுதியாகும். ஆட்டத்தில் வெற்றி பெற, போராடுவது முக்கியம். இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் சீண்டுவது, நேரம் கடத்துவது என பல்வேறு விஷயங்களை செய்வார்கள். இதெல்லாம் வெற்றிக்காக மட்டுமே அவர்கள் செய்கிறார்கள்.

ஆனால் நாளின் இறுதியில் நீங்கள் களத்தில் நடந்தவற்றை மறந்து விட வேண்டும். அந்த வகையில் ஜாக் கிராவ்லி மற்றும் ஜோ ரூட் செய்தது என்னை மிகவும் நெகிழ வைத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் முகாமில் நான் ஜோ ரூட்டுடன் இருந்திருக்கிறேன். அவர் ஒரு ஜென்டில்மேன். அவர் இந்த டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டார். ஒரு அற்புதமான கேட்சை எடுத்து ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்தார்" என்று கூறினார்.

1 More update

Next Story