இது ஒரு அர்த்தமற்ற முடிவு - கம்பீரை விளாசிய ரவி சாஸ்திரி

தென் ஆப்பிரிகாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தர் 8-வது இடத்தில் களமிறங்கினார்.
கவுகாத்தி,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முத்துசாமி 109 ரன்களும், மார்கோ ஜான்சன் 93 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 201 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இருப்பினும் இந்திய அணிக்கு பாலோ - ஆன் வழங்காத தென் ஆப்பிரிக்க அணி 288 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் 3-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. மார்க்ரம் 12 ரன்களுடனும், ரிக்கல்டன் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 122 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த இக்கட்டான சூழலில் இருந்து அணியை 8-வது வரிசையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவின் ஒத்துழைப்புடன் மீட்டெடுத்தார்.
முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வாஷிங்டன் 3-வது வரிசையில் பேட்டிங் செய்தார். ஆனால் இந்த ஆட்டத்தில் அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் 3-வது இடத்தில் களமிறக்கப்பட்டார். வாஷிங்டன் 8-வது வரிசையில் இறங்கினார்.
இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரை இப்போட்டியில் குறைந்தது 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்திருக்க வேண்டுமென்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆனால் அதை செய்யாமல் 8-வது இடத்தில் அவரை விளையாட வைத்தது அர்த்தமற்ற முடிவு என்று கம்பீரை அவர் விளாசியுள்ளார்.
இது குறித்து ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு:- “ இது ஒரு அர்த்தமற்ற முடிவு. இதனுடைய பின்னணியில் இருக்கும் சிந்தனை செயல்முறை எனக்கு புரியவில்லை. அதாவது, அவர்கள் இந்த தொடரில் அவர்கள் செய்த சில தேர்வுகளின் செயல்முறைகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
உதாரணமாக, நீங்கள் கொல்கத்தாவில் (இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்) 4 ஸ்பின்னர்களை விளையாட வைத்து, ஒரு ஸ்பின்னருக்கு ஒரு ஓவரை மட்டுமே வீச வைத்தீர்கள். அங்கே நீங்கள் ஒரு முழு நேர பேட்டருடன் விளையாடியிருக்க வேண்டும்.
அதேபோல் கொல்கத்தா டெஸ்டில் வாஷிங்டன் சுந்தரை 3-வது இடத்தில் பேட் செய்ய வைத்த நீங்கள் இங்கே எளிதாக அவரை 4-வது இடத்தில் விளையாட வைத்திருக்கலாம். ஆனால் 3வது இடத்தில் விளையாடியவரை நீங்கள் இங்கே 8-வது இடத்தில் விளையாட வைக்கிறீர்கள். ஆனால் அவர் 8-வது இடத்தில் இருப்பதை விட மிகச்சிறந்தவர்.” என்று கூறினார்.






