வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய வீரர்கள்.. புறக்கணித்த விராட்.. இந்திய அணிக்குள் விரிசலா..?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ராஞ்சி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று அரங்கேறியது. இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 135 ரன்களும், கே.எல்.ராகுல் 60 ரன்களும், ரோகித் 57 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன், பர்கர், கார்பின் போஷ் மற்றும் ஓட்னீல் பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து 350 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 72 ரன்களும், மார்கோ ஜான்சன் 70 ரன்களும், கார்பின் போஷ் 67 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இந்நிலையில் இந்த வெற்றியை இந்திய அணியினர் ஓட்டலில் கேக் வெட்டி கொண்டாடினர். இந்திய கேப்டன் கே.எல். ராகுல் கேக்கினை வெட்டினார். அப்படி கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது ஆட்ட நாயகன் விராட் கோலி அந்த அறைக்குள் நுழைந்தார்.
கே.எல். ராகுல் கேக் வெட்டும்போது நடந்து வந்த விராட் கோலி வெறும் கை தட்டிவிட்டு அங்கு நிற்காமல் சென்றார். இதனால் விராட் கோலி அணியின் வெற்றி கொண்டட்டத்தை புறக்கணித்ததாக சமூக வலை தளங்களில் பரவியது. அத்துடன் இந்த வீடியோ வைரலானது.
அதேபோல் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் முன்னணி வீரரான ரோகித் சர்மாவுடன் தீவிரமாக பேசி கொண்டிருந்தார். இதனால் இந்திய அணிக்குள் விரிசல் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இது தவிர, சமூக ஊடகங்களில் பரவி வரும் மற்றொரு வீடியோவில், விராட் கோலி டிரஸ்ஸிங் ரூமுக்குள் நுழையும்போது அங்கிருந்த கம்பீரை கண்டும் காணாமலும் செல்வதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்திய அணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாக தொடங்கி உள்ளன.
முன்னதாக இந்திய பயிற்சியாளர் மற்றும் மூத்த வீரர்களுக்கு இடையே பிரச்சினைகள் உள்ளதாக பேசப்படும் நிலையில் இந்த வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இது பலரது மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.






