ஆடுகளம் எதிர்பார்த்த அளவுக்கு உதவவில்லை: ஸ்மித்

இங்கிலாந்து அணியினர் மிகவும் சிறப்பாக விளையாடினர் என ஸ்மித் தெரிவித்துள்ளார்
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 42 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. இதனால், ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.இரண்டே நாளில் போட்டி முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த போட்டியின் தோல்வி தொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கூறியதாவது,
இங்கிலாந்து அணியினர் மிகவும் சிறப்பாக விளையாடினர். இது சவாலான ஒரு போட்டி. இன்னும் 50-60 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். நேற்று பந்து கொஞ்சம் மென்மையானதும் நாங்கள் நினைத்த மாதிரி அது செல்லவில்லை.
அவர்கள் தொடக்கம் முதலே மிகவும் ஆக்ரோஷமாக ஆடியதால் பந்து மேலும் மென்மையாக மாறியது.அதிலிருந்து ஆடுகளம் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பந்து வீச்சாளர்களுக்கு பெரிய அளவில் உதவவில்லை என தெரிவித்தார்.






