கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

ஆஸ்திரேலிய அணி 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பெர்த்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 32.5 ஓவர்களில் 172 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து தடுமாறியது.
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. வேகமும், பவுன்சும் நிறைந்த இந்த ஆடுகளத்தில் நேற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டினர். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி எஞ்சிய ஒரு விக்கெட்டை விரைவில் பறிகொடுத்தது. கடைசி விக்கெட்டாக நாதன் லயன் 4 ரன்னில் பிரைடன் கார்ஸ் பந்து வீச்சில் கேட்ச்சானார்.
45.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 132 ரன்னில் அடங்கியது. பிரன்டன் டாக்கெட் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
40 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 34.4 ஓவர்களில் 164 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், பிரன்டன் டாக்கெட் தலா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக டிராவிஸ் ஹெட், ஜேக் வெதரால்டுவுடன் இணைந்து களம் புகுந்தார். வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே இறங்கிய டிராவிஸ் ஹெட் முதலில் சற்று நிதானத்தை கடைபிடித்தார். அதன் பிறகு பந்தை நாலாபுறமும் விரட்டியடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
ஸ்கோர் 75 ரன்னாக உயர்ந்த போது ஜேக் வெதரால்டு 23 ரன்னில் பிரைடன் கார்ஸ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து மார்னஸ் லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்தார். இருவரும் தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமாக ஆடிய டிராவிஸ் ஹெட் 69 பந்துகளில் தனது 10-வது சதத்தை எட்டினார். இதன் மூலம் டெஸ்டில் அதிவேகமாக சதமடித்த 3-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் 4-வது இன்னிங்சில் (இலக்கை விரட்டும் போது) அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சதமடித்த சற்று நேரத்தில் டிராவிஸ் ஹெட் 123 ரன்னில் (83 பந்து, 16 பவுண்டரி, 4 சிக்சர்) பிரைடன் கார்ஸ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ‘அவுட்’ ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 192 ரன்னாக இருந்தது. இதைத்தொடர்ந்து கேப்டன் ஸ்டீவன் சுமித் வந்தார்.
28.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லபுஸ்சேன் 51 ரன்களுடனும் (49 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்டீவன் சுமித் 2 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (10 விக்கெட்) ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் நாளில் 19 விக்கெட்சரிந்த இந்த டெஸ்ட் போட்டி வியக்க வைக்கும் வகையில் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாளில் முடிவடைந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது . ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.17 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.






