அந்த சிஎஸ்கே வீரரின் பேட்டிங் ஸ்டைல் சேவாக்கை நினைவுபடுத்துகிறது - ரெய்னா

ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் அடித்தார்.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டிவால்ட் பிரெவிஸ் 42 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 30 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதைத்தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த சீசனில் கெய்க்வாட்டுக்கு பதிலாக சென்னை அணியில் அறிமுகம் ஆன 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே களமிறங்கிய 2 போட்டிகளிலும் (32, 30 ரன்கள்) சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆயுஷ் மாத்ரேவின் பேட்டிங் ஸ்டைல் சேவாக் போல உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "அவருடைய கால்களை பாருங்கள். அவருடைய தலை இருக்கும் பொசிஷனை பாருங்கள். சேவாக்பாய் தான் இதே போன்ற பேட்டிங் ஸ்டைலை கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. இவர் நிச்சயம் சென்னை அணிக்காக 10 வருடங்கள் விளையாட போகிறார். மும்பைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம் அவர் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மாவின் பாராட்டுகளை பெற்றார்" என்று கூறினார்.