டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் மாபெரும் சாதனைகள் படைத்த மார்கோ ஜான்சன்


டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் மாபெரும் சாதனைகள் படைத்த மார்கோ ஜான்சன்
x
தினத்தந்தி 24 Nov 2025 6:15 PM IST (Updated: 24 Nov 2025 6:19 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கவுகாத்தி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முத்துசாமி 109 ரன்களும், மார்கோ ஜான்சன் 93 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சனின் வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தது. 83.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் இந்திய அணிக்கு பாலோ - ஆன் வழங்காத தென் ஆப்பிரிக்க அணி 288 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் 3-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. மார்க்ரம் 12 ரன்களுடனும், ரிக்கல்டன் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 93 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆல் ரவுண்டராக ஜொலித்த மார்கோ ஜான்சன் மாபெரும் சாதனைகள் படைத்துள்ளார். அவை விவரம் பின்வருமாறு:-

1. 1988-ம் ஆண்டுக்கு பின் இந்திய மண்ணில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனைக்கு மார்கோ ஜான்சன் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

அதன் விவரம்:

* ஜாகீர் கான் - 3 முறை

* மிட்செல் ஜான்சன் - ஒரு முறை

* மார்கோ ஜான்சன் - ஒரு முறை

2. 2000-ம் ஆண்டுக்கு பின் இந்திய மண்ணில் 5 விக்கெட்டுகள் மற்றும் 50+ ரன்கள் அடித்த 3-வது வெளிநாட்டு வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

* நிக்கி போஜே - 2000-ம் ஆண்டு

* ஜேசன் ஹோல்டர் - 2008-ம் ஆண்டு

* மார்கோ ஜான்சன் - 2025-ம் ஆண்டு

3. இந்திய மண்ணில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 5-வது தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் மார்கோ ஜான்சன் படைத்துள்ளார்.

1 More update

Next Story