டெஸ்ட் கிரிக்கெட்: 532 ரன்கள்... இங்கிலாந்து மண்ணில் 2-வது வீரராக வரலாறு படைத்த கே.எல்.ராகுல்


டெஸ்ட் கிரிக்கெட்: 532 ரன்கள்... இங்கிலாந்து மண்ணில் 2-வது வீரராக வரலாறு படைத்த கே.எல்.ராகுல்
x

image courtesy:PTI

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் 532 ரன்கள் அடித்துள்ளார்.

லண்டன்,

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 51.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட்டாகி, 23 ரன் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 64 ரன்களும், புரூக் 53 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கே.எல். ராகுல் 7 ரன்களிலும், சாய் சுதர்சன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்தியா தற்போது வரை 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன கே.எல்.ராகுல் மொத்தம் 532 ரன்களுடன் ( 5 போட்டிகளில்) தொடரை நிறைவு செய்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு தொடரில் அதிக ரன் குவித்த 2-வது இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற மாபெரும் சாதனையை கே.எல். ராகுல் படைத்துள்ளார். இந்த பட்டியலில் சுனில் கவாஸ்கர் 542 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்:

1. சுனில் கவாஸ்கர் - 542 ரன்கள்

2. கே.எல்.ராகுல் - 532 ரன்கள்

3. முரளி விஜய் - 402 ரன்கள்

4. ரோகித் சர்மா - 368 ரன்கள்

1 More update

Next Story