டி20 உலகக்கோப்பை 2026: ரோகித் சர்மாவுக்கு ஐ.சி.சி. கவுரவம்

image courtesy:ICC
கடந்த ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மும்பை,
10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.
அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்தியாவில் அகமதாபாத், சென்னை கொல்கத்தா, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களிலும் இலங்கையில் கொழும்பு மற்று கண்டியிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த தொடருக்கான போட்டி அட்டவணை மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா, இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 7-ந் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி அகமதாபாத்தில் மோதுகிறது.
முன்னதாக கடந்த டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பையை வென்றதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார்.
இந்நிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் விளம்பர தூதராக ரோகித் சர்மாவை நியமித்துள்ளது. இதனை ஐ.சி.சி.-ன் தலைவர் ஜெய்ஷா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.






