சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி இன்று தொடக்கம்


சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி இன்று தொடக்கம்
x

நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.

ஐதராபாத்,

18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20கிரிக்கெட் போட்டி இன்று முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை ஐதராபாத், ஆமதாபாத், கொல்கத்தா, லக்னோ, புனே ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள் ‘எலைட்’, ‘பிளேட்’ என இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘எலைட்’ பிரிவில் களம் காணும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. நடப்பு சாம்பியன் மும்பை அணி ‘ஏ’ பிரிவிலும், 3 முறை சாம்பியனான தமிழ்நாடு ‘டி’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் லீக்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

‘பிளேட்’ பிரிவில் அருணாச்சலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த பிரிவு ஆட்டங்கள் புனேயில் நடக்கின்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு போட்டியில் ‘எலைட்’ பிரிவுக்கு ஏற்றம் பெறும். ‘எலைட்’ பிரிவில் கடைசி 2 இடத்தை பெறும் அணிகள் அடுத்த ஆண்டு ‘பிளேட்’ பிரிவுக்கு தரம் இறக்கப்படும்.

இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே (இருவரும் மும்பை), ஹர்திக் பாண்ட்யா (பரோடா), சஞ்சு சாம்சன் (கேரளா), அக்‌ஷர் பட்டேல் (குஜராத்), வருண் சக்ரவர்த்தி (தமிழ்நாடு), ரியான் பராக் (அசாம்), வெங்கடேஷ் அய்யர் (மத்தியபிரதேசம்), தீபக் ஹூடா (ராஜஸ்தான்), ரவி பிஷ்னோய் (குஜராத்) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர்.

.தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் வருண் சக்ரவர்த்தி தலைமையிலான தமிழக அணி, ராஜஸ்தானை ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு சந்திக்கிறது. மற்ற ஆட்டங்களில் கர்நாடகா-உத்தரகாண்ட், மும்பை- ரெயில்வே, ஜம்மு காஷ்மீர்-மராட்டியம், இமாசலபிரதேசம்- பஞ்சாப், பரோடா-பெங்கால், டெல்லி-ஜார்கண்ட் அணிகள் மோதுகின்றன

1 More update

Next Story