சையத் முஷ்டாக் அலி கோப்பை: ஹர்திக் அதிரடி.. பஞ்சாபை வீழ்த்திய பரோடா

image courtesy:PTI
பஞ்சாப் கேப்டன் அபிஷேக் சர்மா வெறும் 19 பந்துகளில் அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார்.
ஐதராபாத்,
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்கும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குள் நுழையும்.
இதில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் - பரோடா (குரூப் சி) அணிகள் மோதின. காயத்திலிருந்து ஏறக்குறைய 2 1/2 மாதங்களுக்கு பிறகு திரும்பிய இந்திய முன்னணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பரோடோ அணியில் இடம்பெற்றார்.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. கேப்டன் அபிஷேக் சர்மா வெறும் 19 பந்துகளில் அரைசதம் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அன்மோல்ப்ரீத் சிங் (69 ரன்கள்) மற்றும் நமன் திர் (39 ரன்கள்) ஆகியோரும் அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணி 200 ரன்களை கடக்க உதவினர்.
இருப்பினும் இறுதி கட்டத்தில் பஞ்சாப் அணியின் ரன் வேகம் சற்று தளர்ந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் 222 ரன்கள் குவித்தது. காயத்திலிருந்து மீண்டு களத்திற்கு திரும்பிய பாண்ட்யா 4 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி ஏமாற்றினார்.
இதனையடுத்து 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பரோடோ அணியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன விஷ்னு சோலங்கி 43 ரன்களும், ஷாஷ்வத் ராவத் 31 ரன்களும் அடித்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா - ஷிவாலிக் சர்மா கூட்டணி அதிரடியாக விளையாடி பரோடா அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தது. ஷிவாலிக் சர்மா தனது பங்குக்கு 47 ரன்கள் அடித்த நிலையில் ரிட்டயர்டு அவுட் ஆனார். மறுபுறம் பஞ்சாப் பந்துவீச்சை நொறுக்கிய ஹர்திக் அணியை வெற்றி பெற வைத்தார்.
19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் அடித்த பரோடா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. ஹர்திக் பாண்ட்யா 77 ரன்களுடனும், ஜிதேஷ் சர்மா 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.






