இந்திய வீரர்களை இழிவுபடுத்தி பேசிய தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர்....வலுக்கும் கண்டனம்


இந்திய வீரர்களை இழிவுபடுத்தி பேசிய தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர்....வலுக்கும் கண்டனம்
x
தினத்தந்தி 26 Nov 2025 11:22 AM IST (Updated: 26 Nov 2025 11:22 AM IST)
t-max-icont-min-icon

நேற்று செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் இந்திய அணி வீரர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார்.

சென்னை,

கவுகாத்தியில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. ஏனெனில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 549 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 5வது நாள் தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது . சாய் சுதர்சன், ஜடேஜா ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர் .

தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். ஏற்கனவே கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று இந்திய மண்ணில் 25 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதன் காரணமாக இந்திய அணி மீது நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், நேற்று செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் இந்திய அணி வீரர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார். 2வது இன்னிங்ஸில் டிக்ளேர் செய்யாமல் நீண்ட நேரம் பேட்டிங் செய்தது குறித்து பதிலளித்த அவர் ,

``We Wanted India To Grovel’’ என தெரிவித்தார். `Grovel’ என்றால், கைகள், முழங்கால்களை தரையில் ஊன்றி மண்டியிட வைப்பது என அர்த்தம். இது இனவெறியை குறிக்கும் என்பதால் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1976ல், இங்கிலாந்து கேப்டன் டோனி க்ரீக், வெஸ்ட்இண்டீஸ் அணியை இதே வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்து, பின்னர் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story