‘மன்னிக்கவும் இம்முறை..’ ரிஷப் பண்டின் பதிவு வைரல்

image courtesy:PTI
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது.
மும்பை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
இதில் சுப்மன் கில் காயத்தால் விலகிய நிலையில் 2-வது போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டார். அவரது தலைமையில் விளையாடிய இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது மோசமான தோல்வியை இந்தியா பதிவு செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை போட்ட அந்த மகத்தான பயணம் கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது. அடுத்த ஓராண்டுக்குள் மேலும் ஒரு பேரிடி விழுந்துள்ளது. தற்ப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணி எதிர்பார்ப்பு நிகராக இல்லை செயல்படவில்லை என்பதை கேப்டன் ரிஷப் பண்ட் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் போதுமான அளவு நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பதில் வெட்கப்படுவதற்கில்லை.
ஒரு அணியாகவும் தனிநபர்களாகவும், நாங்கள் எப்போதும் உயர்ந்த மட்டத்தில் செயல்படவும், கோடிக்கணக்கான இந்தியர்களின் முகத்தில் புன்னகையை அளிக்கவும் விரும்புகிறோம். மன்னிக்கவும், இம்முறை நாங்கள் எதிர்பார்ப்புக்கு நிகராக விளையாடவில்லை. ஆனால் விளையாட்டு என்பது ஒரு அணியாகவும் தனிநபர்களாகவும் உங்களுக்கு கற்றுக் கொடுத்து வளர உதவும்.
இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய கவுரவம். இந்த அணியின் திறன் என்ன என்பதை நாங்கள் அறிவோம். இங்கிருந்து நாங்கள் அணியாகவும் தனிநபர்களாகவும் மீண்டும் ஒன்றிணைந்து, மீண்டும் கவனத்தை செலுத்தி கடினமாக உழைத்து வலுவாக திரும்பி வருவோம்.
உங்கள் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் அன்புக்கு நன்றி!
ஜெய் ஹிந்த்.” என்று பதிவிட்டுள்ளார்.






