சாய் கிஷோர், ஜெகதீசன் அதிரடி.. திரிபுராவை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி


சாய் கிஷோர், ஜெகதீசன் அதிரடி.. திரிபுராவை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி
x

image courtesy:twitter/@TNCACricket

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு - திரிபுரா அணிகள் மோதின.

ஆமதாபாத்,

18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடர் ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.

இதில் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - திரிபுரா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திரிபுரா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 26 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. முன் வரிசை வீரர்களான அமித் சாத்விக் 5 ரன்களிலும், துஷார் ரஹேஜா 4 ரன்களிலும், சாய் சுதர்சன் 5 ரன்களிலும், முகமது அலி 2 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த கேப்டன் ஜெகதீசன் - சாய் கிஷோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். திரிபுரா பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அரைசதம் கடந்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. ஜெகதீசன் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே சாய் கிஷோர் 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தமிழக அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. திரிபுரா தரப்பில் சவுரப் தாஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய திரிபுரா அணி ஆரம்பம் முதலே தமிழக பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. 18.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த திரிபுரா 143 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழக அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

திரிபுரா தரப்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 39 ரன்கள் அடித்தார். தமிழக அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங், நடராஜன் மற்றும் சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

1 More update

Next Story