ரூட் - பிரசித் கிருஷ்ணா விவகாரம்: நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.எல்.ராகுல்... என்ன நடந்தது..?

இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்டின் 2ம் நாளில் இந்த சம்பவம் நடந்தது.
லண்டன்,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 51.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட்டாகி, 23 ரன் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 64 ரன்களும், புரூக் 53 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் அடித்துள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தற்போது வரை 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது 22-வது ஓவரை இந்திய வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் கிராவ்லி ஆட்டமிழந்தார். அடுத்த 5 பந்துகளை எதிர்கொண்ட ஜோ ரூட், முதல் 4 பந்துகளை வீணடித்த நிலையில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார்.
இந்த ஓவரின் 5-வது பந்தை வீசியதும் பிரசித் கிருஷ்ணா நேராக சென்று ஜோ ரூட்டிடம் ஏதோ கூறியதாக தெரிகிறது. அதற்கு ஜோ ரூட்டும் பதில் கூற லேசான வாக்குவாதம் உருவானது. இதனையடுத்து கடைசி பந்தில் பவுண்டரி அடித்ததும் ஜோ ரூட் நேராக பிரசித் கிருஷ்ணாவிடம் சென்று வாக்குவாதம் செய்தார். இருவரும் ஆக்ரோஷத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே நடுவர்கள் உள்ளே புகுந்து தடுத்து நிறுத்தினர். இருப்பினும் இந்த விவகாரத்தில் கள நடுவர்களில் ஒருவரான குமார் தர்மசேனா, பிரசித் கிருஷ்ணாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஜோ ரூட்டை கண்டிக்கவில்லை.
எனவே ரூட்டையும் சேர்த்து கண்டிக்காமல் கிருஷ்ணாவை மட்டும் கண்டித்த தர்மசேனாவிடம் இந்திய வீரர் கே.எல்.ராகுல் வாக்குவாதம் செய்தார். அவர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதம் அங்குள்ள ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அது தற்போது வைரலாகி வருகிறது.
அதன்படி அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல் பின்வருமாறு:-
ராகுல்: நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அமைதியாக இருக்க வேண்டுமா?
தர்மசேனா: எந்த பந்து வீச்சாளரும் உங்களிடம் வந்து நடந்து வருவதை நீங்கள் விரும்புவீர்களா? இல்லை, நீங்கள் அதைச் செய்ய முடியாது. இல்லை, ராகுல், நாங்கள் அந்த வழியில் செல்லக்கூடாது.
ராகுல்: நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? வெறும் பேட்டிங், பவுலிங் செய்து விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டுமா?
தர்மசேனா: போட்டியின் முடிவில் நாம் விவாதிப்போம். நீங்கள் இப்படி பேச கூடாது ராகுல்.
இவ்வாறு அவர்களுக்கு இடையிலான உரையாடல் அமைந்தது.