‘கேப்டன் பதவியால் பெருமை’- ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி

தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
கவுகாத்தி,
இந்தியாவுக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.
முதலாவது டெஸ்டின் 2-வது நாள் ஆட்டத்தின் போது கழுத்து பிடிப்பால் இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அணிக்கு திரும்பிய அவர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. இதையடுத்து அவர் அணியில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார். காயத்தின் தீவிரதன்மையை மேலும் ஆராய்வதற்காக மும்பைக்கு செல்ல உள்ளார். இதனால் துணை கேப்டன் ரிஷப் பண்ட் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தப்போகும் 38-வது கேப்டன் என்ற பெருமையை பண்ட் பெறுகிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,, ‘
ஒரே ஒரு போட்டிக்கு மட்டும் கேப்டனாக இருப்பது சிறந்ததொரு சூழல் கிடையாது. இருப்பினும் கிரிக்கெட் வாரியம் இந்த வாய்ப்பை வழங்கியதை நினைத்து பெருமைப்படுகிறேன். தேசிய அணிக்கு தலைமை தாங்குவது எப்போதுமே பெருமையான தருணமாகும்.
ஆனால் கேப்டன்ஷிப் குறித்து ரொம்ப அதிகமாக யோசிக்க விரும்பவில்லை. முதலாவது டெஸ்ட் எங்களுக்கு கடினமாக அமைந்தது. இப்போது இந்த டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டியது முக்கியம்’ என்றார்.






