பிரசித், சிராஜ் அபாரம்...முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 247 ரன்கள் சேர்ப்பு

இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 69.4 ஓவர்களில் 224 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராவ்லி - பென் டக்கெட் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடி 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. பென் டக்கெட் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆலி போப் களமிறங்கினார். சிறப்பாக ஆடிய கிராவ்லி 64 ரன்களிலும், ஆலி போப் 22 ரன்களிலும் அவுட்டாகினார்.
பின்னர் ஜோ ரூட் - ஹாரி புரூக் ஜோடி சேர்ந்து விளையாடினர். இதில் ஜோ ரூட் தனது பங்குக்கு 29 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேக்கப் ஜேக்கப் பெத்தேல் (6 ரன்கள்) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அடுத்து வந்த ஜேமி ஸ்மித் (8 ரன்கள்) மற்றும் ஜேமி ஓவர்டான் (0 ரன்) இருவரையும் பிரசித் கிருஷ்ணா ஒரே ஓவரில் காலி செய்தார்.
சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து வேகமாக விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஹாரி புரூக் பொறுப்புடன் விளையாடி இங்கிலாந்து முன்னிலை பெற உதவினார். அவருடன் ஜோடி சேர்ந்த அட்கின்சன் 11 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய அவர் அரைசதமடித்து அசத்தினார். தொடர்ந்து புரூக் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். காயம் காரணமாக முதல் இன்னிங்சில் கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்ய வரவில்லை . இதனால் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 9விக்கெட் இழப்பிற்கு 247ரன்கள் எடுத்த நிலையில் முடிவுக்கு வந்தது. 23 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.