பஹல்காம் தாக்குதல்: அனைத்தையும் சினிமா ஆக்காதீர்கள் - ஷாகித் அப்ரிடி சர்ச்சை கருத்து


பஹல்காம் தாக்குதல்: அனைத்தையும் சினிமா ஆக்காதீர்கள் - ஷாகித் அப்ரிடி சர்ச்சை கருத்து
x

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

லாகூர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு விளையாட்டு பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதற்கு காரணமான பாகிஸ்தான் மீது இந்திய அரசாங்கம் அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷாகித் அப்ரிடியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "அங்கே ஒரு பட்டாசு வெடித்தாலும், அவர்கள் அதற்கு பாகிஸ்தான் மீது பழி சுமத்துவார்கள். காஷ்மீரில் 800,000 பேர் கொண்ட ராணுவம் இருந்தாலும் இந்த சம்பவம் நடந்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியாவிட்டால் நீங்கள் திறமையற்றவர் மற்றும் பயனற்றவர் என்று அர்த்தம்.

தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்திற்குள், அவர்களின் ஊடகங்கள் பாலிவுட் சினிமா போல் மாறியது ஆச்சரியமாக இருக்கிறது. கடவுளின் பொருட்டு, எல்லாவற்றையும் சினிமா ஆக்காதீர்கள். நான் ஆச்சரியப்பட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் அவர்கள் பேசும் விதத்தை நான் ரசித்தேன். தங்களைத் தாங்களே படித்தவர்கள் என்று சொல்லும் இந்தியர்கள் தங்களது சிந்தனைகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதில் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடிய 2 வீரர்கள் உள்ளனர். அவர்கள் தூதர்களாகவும் சிறந்த கிரிக்கெட் வீரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நேரடியாக பாகிஸ்தானைக் குறை கூறுகிறார்கள்" என்று கூறினார்.


1 More update

Next Story